8th pay commission அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 18 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக காத்திருந்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 8வது மத்திய ஊதியக் குழுவின் (8th Central Pay Commission - CPC) பணி வரம்புகளுக்கு (Terms of Reference - ToR) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 1.1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய ஊதிய அமைப்புக்கான பாதை திறந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சேவைப் பலன்களில் திருத்தங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க 8வது சம்பளக் குழு அமைக்கப்படும் என்று அரசாங்கம் முன்னதாக 2025 ஜனவரியில் அறிவித்தது.
விவரம்
முக்கிய முடிவுகளின் விவரம்
இந்தக் குழு, அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது இறுதிப் பரிந்துரைகளை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு தற்காலிக அமைப்பாகச் செயல்படும். இதில் ஒரு தலைவர், ஒரு பகுதி நேர உறுப்பினர், மற்றும் ஒரு உறுப்பினர்-செயலர் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள். அதன்படி,8 வது ஊதிய குழு தலைவராக முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் உறுப்பினராக, ஐஐஎம் பெங்களூரு பேராசிரியர் புலாக் கோஷ் மற்றும் உறுப்பினர்-செயலராக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு செயலாளர் பங்கஜ் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரம்புகள்
ஊதியக் குழுவின் பரிசீலனை வரம்புகள்
தனது பரிந்துரைகளை வழங்கும் முன், 8வது ஊதியக் குழு பின்வரும் முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது: நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் மத்திய அரசின் நிதி ஒழுக்கத்தை (Fiscal Discipline) கடைப்பிடிப்பது. நாட்டின் வளர்ச்சிச் செலவினங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்குப் போதுமான நிதி கிடைப்பதை உறுதி செய்தல். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்துடன் ஒப்பிட்டு, சமநிலையை உறுதிப்படுத்துவது. மத்திய அரசின் ஊதியத் திருத்தங்கள், மாநில அரசுகளின் நிதிநிலையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் குழு ஆராயும். விரைவில் ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.