இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு
இந்திய சந்தையில் விற்பனையாகும் மருந்துகள் குறித்து மத்திய அரசு, மருந்து தர கட்டுப்பாட்டு துறை மூலம் தொடர்ந்து மருந்தின் தரம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இருமல், வலி, சளி, காய்ச்சல் உள்ளிட்டவைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் 14 வகையான மருந்தின் கலவைகள் நிவாரணம் அளிப்பதில் திருப்திகரமாக இல்லை என்று கூறி மத்திய அரசு அதன் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. அதாவது, குளோரபினாரமின் மெலியட் காடேயின், அமாக்ஸலின் ப்ரோமேக்சின், நிம்சலைடு பாராசிட்டமால் போன்ற கலவை மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அவகாசம் வழங்க வாய்ப்பில்லை - மருத்துவத்துறை அதிகாரிகள்
இதனை தொடர்ந்து, இந்த மருந்துகளை உடனே தடை செய்தால் இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட கூடும். அதனால் இந்த மருந்துகளின் தடையினை அமல்படுத்த மூன்று மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து வர்த்தக நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாடு துறைக்கு கோரிக்கை மனுவினை அளித்துள்ளார்கள். இதனையடுத்து, "தனிப்பட்ட ஓர் மாநிலத்திற்கு மட்டும் இதுபோன்ற கால அவகாசத்தினை வழங்க முடியாது. மேலும் இந்த மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் காரணத்தினாலேயே தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் இந்த மருந்துகளின் தடைக்கு கால அவகாசம் வழங்குவது என்பது சாத்தியமில்லாத விஷயம் ஆகும்" என்று மருந்து தர கட்டுப்பாடு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.