பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வருகிறது பாலியல் கல்வி: மத்திய அரசின் புதிய முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்குமா?
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசின் உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விரிவான பாலியல் கல்வி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இத்திட்டம் நாடு தழுவிய அளவில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மைனர் பருவத்தினர் இடையேயான காதல் உறவுகள் மற்றும் இளம் வயது கர்ப்பங்கள், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாக்கப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் 26 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு சமர்ப்பித்த விரிவான பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
பரிந்துரைகள்
தேசிய நிபுணர் குழுவின் முக்கியப் பரிந்துரைகள்
பள்ளிகளின் பாடத்திட்டத்தில் 'விரிவான பாலியல் கல்வி' மற்றும் 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு' ஆகியவற்றை முதன்மை பாடங்களாக சேர்க்க வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்துள்ளது.
தொடக்கக் கல்வி நிலையிலேயே சுகாதாரம், உடலமைப்பு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான-பாதுகாப்பற்ற தொடுதல் போன்ற அடிப்படை விழிப்புணர்வு கருத்துகளை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாடத்திட்டம்
NEP-2020 உடன் இணையும் புதிய பாடத்திட்டம்
புதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP-2020) முழுமையான வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் திறன் கோட்பாடுகளுக்கு இணங்க, தற்போதைய இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டங்களை மறுஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும் என இக்குழு தெரிவித்துள்ளது.
இதற்காகப் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் இருந்து, வாரத்திற்கு இரண்டு முறை குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இப்பாடங்களை நடத்தத் தனிப்பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்கவும், பெற்றோர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றம் விரைவில் தனது இறுதி உத்தரவை பிறப்பிக்கவுள்ளது.