LOADING...
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: 8வது ஊதியக் குழுவில் ஊதிய உயர்வு மட்டுமல்ல; இவையும் மறுபரிசீலனை செய்யப்படும்
8வது ஊதியக் குழுவில் ஊதிய உயர்வில் போனஸ் மற்றும் படிகளும் மறுஆய்வு செய்யப்படும்

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: 8வது ஊதியக் குழுவில் ஊதிய உயர்வு மட்டுமல்ல; இவையும் மறுபரிசீலனை செய்யப்படும்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2025
10:34 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பாக, 8வது ஊதியக் குழுவை (8th Central Pay Commission) அமைத்து மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட இந்த ஆணையம், ஊழியர்களின் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மட்டுமின்றி, படிகள் (Allowances), போனஸ், பணிக்கொடை (Gratuity) உள்ளிட்ட அனைத்து நிதிப் பலன்களையும் மறுஆய்வு செய்யும். இந்தக் குழுவின் தலைவராக நீதிபதி ரஞ்சனா தேசாய், பகுதிநேர உறுப்பினராகப் பேராசிரியர் புலக் கோஷ் மற்றும் உறுப்பினர் செயலாளராகப் பங்கஜ் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் தலைமையகத்தைக் கொண்ட இந்த ஆணையம், தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.

பலன்

யாருக்கு பலன்?

இந்த ஊதியக் குழுவின் வரம்புக்குள், மத்திய அரசின் தொழில்துறை மற்றும் தொழில்துறை அல்லாத ஊழியர்கள், அகில இந்தியச் சேவை அதிகாரிகள், ஆயுதப் படைகள் மற்றும் யூனியன் பிரதேச ஊழியர்கள் உட்படப் பலதரப்பட்ட பிரிவினர் வருவார்கள். ஆணையம் பின்வரும் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும்: ஊதியம் மற்றும் படிகள் சீரமைப்பு: அரசுப் பணிகளைத் திறமையான இளைஞர்களுக்கு ஈர்ப்பதற்கும், பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கும் ஊதியம், படிகள் மற்றும் பிற பணப்பலன்களில் தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்கும். போனஸ் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (PLI): தற்போதுள்ள போனஸ் திட்டங்களை மறுஆய்வு செய்வதுடன், சிறந்த ஊழியர்களுக்குப் புதிய செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகைப் பரிந்துரைகளையும் வழங்கலாம்.

ஓய்வூதியம்

ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் உள்ள ஊழியர்களுக்கான பணிக்கொடை உட்பட ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைப் பலன்களின் மேம்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். ஆணையம் தனது பரிந்துரைகளை வழங்கும் போது, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் மாநிலங்களின் நிதி நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த வருமானக் கட்டமைப்பை மேம்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.