டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில்
டெல்லி-நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஓர் கேள்வியினை எழுப்பினார். அதன்படி, அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும், சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் மூலம் ஊக்குவிப்பதற்கு எதிராக ஏதேனும் அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இவரது இந்த கேள்விக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் எழுத்துபூர்வமாக தற்போது பதில் அளித்துள்ளார். அதன் படி அவர் கூறியுள்ளதாவது, பந்தயம் மற்றும் சூதாட்டம் அரசமைப்பு சட்டத்தின் 34 மற்றும் 62ன் கீழ் வருகிறது. இது மாநிலங்களின் ஒழுங்குமுறைக்குள் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட விதிமீறல்கள் அமைச்சக கவனத்திற்கு வந்தால் உடனே நடவடிக்கை
இதனை தொடர்ந்து, முந்தைய பொது சூதாட்ட சட்டமான 1867ன் படி, பெரும்பாலான மாநில அரசுகள் பந்தயம் மற்றும் சூதாட்டம் குறித்து தங்களது சொந்த சட்டங்களை இயற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அவர், தனியார் டிவி சேனல்கள், டிஜிட்டல் செய்தி வெளியிடுவோர் மற்றும் ஓடிடி தளங்களில் ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கடந்தாண்டு ஜூன் 13ம் தேதி ஆலோசனைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து, மேற்கூறிய ஆலோசனைகள் சமூக ஊடக தளங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட விதிமீறல்கள் அமைச்சக கவனத்திற்கு எப்பொழுது வந்தாலும் அதற்கான தகுந்த நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றும் அவர் தனது எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.