
டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம்
செய்தி முன்னோட்டம்
மதுபான விற்பனைக் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகங்களுக்கு வெளியே பாஜக இன்று(பிப் 4) மாபெரும் போராட்டத்தை நடத்தியது.
பாஜகவினர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதுடன், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைக்கவும் முயன்றனர். இன்னும் சிலர் பதாகைகளுடன் நின்று கோஷம் எழுப்பினர்.
அமலாக்க இயக்குனரகம் சமீபத்தில் இந்த ஊழல் தொடர்பான இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதை சுட்டிய காட்டும் பாஜக, டெல்லி முதல்வர் ஊழலில் ஈடுபட்டது நிரூபணமாகி இருக்கிறது என்று கூறியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் ஐந்து நபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது.
டெல்லி
ஊழல் பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED
மத்திய அரசின் பிரதிநிதியான டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதையடுத்து, இந்த மது கொள்கையை ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டு திரும்பப் பெற்றது.
மதுபான கொள்கை மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் ரூ.100 கோடி பணத்தை கோவா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி பயன்படுத்தியதாக நிதிக் குற்றங்களை விசாரிக்கும் அமலாக்க இயக்குனரகம் கூறியுள்ளது.
இந்த குற்றசாட்டுகள் அனைத்தையும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முற்றிலும் மறுத்துள்ளார். மேலும், இதை "போலி" என்று கூறிய அவர், இவை அனைத்தும் பாஜக அரசாங்கத்தின் வேலை என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.