பள்ளிகளில் நாய் கடி சம்பவங்களைத் தடுக்க சிபிஎஸ்இ அதிரடி பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு
விழிப்புணர்வு மற்றும் முதலுதவிப் பயிற்சிகள்
பள்ளிகள் தங்களது மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு அமர்வுகளை நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. நாய் கடித்தால் உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவி முறைகள் மற்றும் சம்பவம் குறித்து உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கும் நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் உள்ள தெருநாய்களை அகற்றுவதற்கும், அவை மீண்டும் வராமல் தடுப்பதற்கும் பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாப்பு
பள்ளி வளாகப் பாதுகாப்பு மற்றும் அதிகாரியின் நியமனம்
ஒவ்வொரு பள்ளியும் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த அதிகாரி பள்ளி வளாகத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பைக் கண்காணிக்க வேண்டும். பள்ளியின் சுற்றுச்சுவர், வேலி மற்றும் நுழைவாயில்கள் பலமாக இருப்பதை உறுதி செய்வது இவரின் முக்கியப் பொறுப்பாகும். மேலும், பள்ளி வளாகத்தில் நாய்கள் தங்குவதற்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியக் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். கழிவு மேலாண்மை மற்றும் முறையான வடிகால் அமைப்புகளைப் பராமரிப்பதன் மூலம் நாய்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்க முடியும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.