10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் குறித்த வதந்திகளுக்கு எதிராக CBSE எச்சரிக்கை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வரவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த வதந்திகள் மற்றும் போலியான தகவல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வுகள் சுமூகமாகவும் நியாயமாகவும் நடைபெற விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த வாரியம் மேலும் தெரிவித்துள்ளது. பல்வேறு வகையில் பரப்பப்படும் தேர்வுத்தாள் கசிவுகள் மற்றும் போலி மாதிரி காகித இணைப்புகள் தொடர்பான வதந்திகள் குறித்து CBSE அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15, 2024 அன்று தொடங்க உள்ளன.
சில நபர்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக CBSE தகவல்
12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2 வரை நடத்தப்படும். 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 13 வரை நடைபெற உள்ளன. இந்நிலையில், யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் பரவி வரும் வதந்திகள் குறித்து அச்சம் தெரிவித்துள்ள கல்வி வாரியம், கேள்வித்தாள் கசிவு மற்றும் போலி வினாத்தாள்கள் குறித்து சில நபர்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இதனால் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் CBSE கூறியுள்ளது.