மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: புதிய அறிவிப்பு வெளியீடு
செய்தி முன்னோட்டம்
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒத்திவைத்துள்ளது. இதன்படி, மார்ச் 9 முதல் 11 வரை நடைபெறவிருந்த கணிதம், உணவு உற்பத்தி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் இசை உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள சிபிஎஸ்இ மையங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் நிலைமையை ஆய்வு செய்த பிறகு பின்னர் அறிவிக்கப்படும்.
ரத்து
10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து
ஏற்கனவே நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சிபிஎஸ்இ முழுமையாக ரத்து செய்துள்ளது. மார்ச் 7 முதல் 11 வரை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மார்ச் 2, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளுக்கான தேர்வுகளும் இதனுடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எவ்வாறு அறிவிக்கப்படும் என்பது குறித்து சிபிஎஸ்இ பின்னர் விளக்கம் அளிக்கும். கடந்த கால நடைமுறைகளின்படி, சிபிஎஸ்இ தேர்வுகள் முடிந்த 50 முதல் 60 நாட்களுக்குள் முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.