மாணவர்கள் கவனத்திற்கு! போர் பதற்றத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முக்கிய மாற்றங்களை வாரியம் அறிவித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை முன்னிறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மார்ச் 5, 2026 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
10 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மார்ச் 7, 2026 முதல் மார்ச் 11, 2026 வரை நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கனவே தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மார்ச் 2, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளுக்கான தேர்வுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எவ்வாறு கணக்கிடப்படும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தனியாக வெளியிடப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது.
12 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
12 ஆம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை, தேர்வுகள் முற்றிலும் ரத்து செய்யப்படவில்லை, மாறாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மார்ச் 7, 2026 அன்று நடைபெறவிருந்த பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மார்ச் 9 ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் இதர தேர்வுகள் குறித்து, மார்ச் 7 அன்று நிலமையை ஆய்வு செய்த பிறகு சிபிஎஸ்இ வாரியம் புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.
அறிவுறுத்தல்
பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்
பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள், வாரியத்தின் வழிகாட்டுதல்களைத் துல்லியமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வதந்திகளை நம்பாமல், பள்ளிகள் மூலம் வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.