CBSE பிளஸ் 2 ரிசல்ட் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
CBSE, 2026-ஆம் ஆண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக பிளஸ் 2 விடைத்தாள்கள் முழுமையாக OSM எனப்படும் டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதில் குளறுபடிகள் ஏற்படுவதாகச் சில ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "மதிப்பீட்டுப் பணிகள் மிகச்சிறப்பாகவும், முந்தைய முறைகளை விட வேகமாகவும் நடந்து வருகின்றன. ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு மாறானவை," என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய முறையில் விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்கள் மிகுந்த திருப்தியுடன் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் இந்த நவீன முறையை பாராட்டுவதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது.
செயல்பாடு
OSM முறை எவ்வாறு செயல்படுகிறது?
பாரம்பரியமாக பேனா கொண்டு விடைத்தாள்களை திருத்துவதற்கு பதிலாக, இந்த முறையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களின் விடைத்தாள்கள் முதலில் டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்யப்படுகின்றன. ஆசிரியர்கள் கணினித் திரையில் விடைத்தாள்களைப் பார்த்து மதிப்பெண்களைப் பதிவு செய்வார்கள். மதிப்பெண்களைக் கூட்டுவதில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த முறை உதவுகிறது.