CBSE தலைவர் ராகுல் சிங் திடீர் இடமாற்றம்; டிஜிட்டல் விடைத்தாள் திருத்த முறைகேடு குறித்து மத்திய அரசு விசாரணை
செய்தி முன்னோட்டம்
சிபிஎஸ்இ நிர்வாகக் கட்டமைப்பில் மத்திய அரசு அதிரடியான அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகிய இரு உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகளையும் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்துள்ள மத்திய அரசு, வாரியத்தின் விடைத்தாள் மதிப்பீட்டு ஒப்பந்தத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ வாரியத்தின் முழுமையான செயல்பாடுகள், தேர்வுகள், கல்விக்கொள்கை அமலாக்கம் மற்றும் சீர்திருத்தங்களை கவனித்து வந்த தலைவர் ராகுல் சிங் மற்றும் வாரியத்தின் நிதி, நிர்வாகம், பள்ளி அங்கீகாரங்களை கவனித்து வந்த செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகிய இரு IAS அதிகாரிகளும் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.
முறைகேடு
ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) முறைகேடு விசாரணை
இந்தியாவின் மிகப்பெரிய பள்ளித் தேர்வு வாரியத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பக் குளறுபடிகள் குறித்து நாடு முழுவதும் எழுந்த புகார்களை அடுத்து இந்த மிகப்பெரிய நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, விடைத்தாள்களைக் கணினி வழியே திருத்தும் 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்'(OSM) தொழில்நுட்பச் சேவைக்கான டெண்டர் மற்றும் கொள்முதல் நடைமுறைகளை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக எஸ். ராதா சௌஹான் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு ஒப்பந்தம் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எப்படி வழங்கப்பட்டது, விதிகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டனவா மற்றும் இதில் ஏதேனும் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது குறித்து இக்குழு விரிவாக விசாரித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.
பின்னணி
மாணவர்களின் புகார்களும் தற்போதைய பின்னணியும்
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, தங்களின் விடைத்தாள் நகல்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த மாணவர்களுக்கு பக்கங்கள் மங்கலாக (Blurred) இருப்பது, விடைத்தாளின் சில பகுதிகள் விடுபட்டிருப்பது போன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் அரங்கேறின. இதுமட்டுமன்றி, மறுமதிப்பீட்டுச் சேவைகளில் ஏற்பட்ட தாமதங்கள், சைபர் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் மற்றும் இந்த ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் மென்பொருளை வழங்கிய நிறுவனத் தேர்வு முறை ஆகியவை கடுமையான பொதுவிமர்சனத்திற்கு உள்ளான பின்னணியிலேயே மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.