காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது: கர்நாடக முதல்வர் பேட்டி
காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருவதாக காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முதல்வருமான சித்தராமையா கூறியுள்ளார். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான மேகதாது அணை பிரச்சனை பல ஆண்டுகளாக கர்நாடகாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே நடந்து வருகிறது. கர்நாடகாவின்(முக்கியமாக பெங்களூரின்) தண்ணீர் தேவையையும் மின்சார தேவையையும் பூர்த்தி செய்ய மேகதாது அணை அவசியம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. ஆனால், திமுக தலைமையிலான தமிழக அரசு இந்த அணையை கட்டவிட்டால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் சரியாக கிடைக்காது என்று கூறுகிறது. இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முதல்வருமான சித்தராமையா பேட்டியளித்திருக்கிறார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது. காவிரி நதியில் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க மத்திய பாஜக அரசு காலதாமதம் செய்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் காவிரி நதி நீர் பிரச்சனைக்கு மேகதாது அணை மட்டுமே ஒரே தீர்வு. தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்த காரணமும் இல்லை. அனைத்து கட்சி கூட்டத்தின் போது, காவிரி நதி நீர் விவகாரத்தில் அரசியல் செய்ய மாட்டோம் என்று மத்திய அரசு கூறியது. ஆனால், பாஜக அரசு தற்போது அதை தான் செய்து கொண்டிருக்கிறது. வரும் 21ஆம் தேதி இந்த பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. அப்போது, எங்களது உண்மை நிலையை நாங்கள் தெரிவிப்போம்.