பள்ளிகளில் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல்
கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான சில தனியார் பள்ளிகளில், மாணவர்களின் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது என்று கல்வித்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது. கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அவர்களின் ஜாதி, மதம் குறித்த விவரங்களை குறிப்பிட வேண்டும் என்னும் நடைமுறை செயலில் உள்ளது. இந்நிலையில், இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகர மாவட்ட தலைவரான நேரு தாஸ் முதன்மை கல்வி அலுவலரிடம் இது குறித்து சமீபத்தில் புகார் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளில், இனி மாணவர்களின் ஜாதி, மத விவரங்களை குறிப்பிடுவதினை கட்டாயமாக்க கூடாது என்று மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும்-அமைச்சர் அன்பில் மகேஷ்
மேலும், இது குறித்த அறிக்கையும், குறிப்பிட்ட அந்த தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக கல்வி மேலாண்மை தகவல் மையம் இணையதளத்தில், பள்ளிகளில் பதிவுசெய்யப்படும் மாணவர்களின் விவரங்களில் ஜாதி, மதம் குறித்த விவரங்கள் அடங்கியுள்ளது என்பது குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு பதிலளித்திருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், 'முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும். அது போல் என்ன சாதி என்பதை தெரிந்துகொண்டால் தான், கல்வி உதவி தொகை, இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை அளிக்க முடியும்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.