மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் 7 பேர் பலி
மகாராஷ்டிராவின் ஜல்னாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. தகவல்களின்படி, பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்ட ஒரு வாகனம் தவறான திசை வழியாக நெடுஞசாலைக்குள் நுழைந்ததால் இரண்டு கார்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறிது நேரம் வரை அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11 மணியளவில், எரிபொருள் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்க்கிற்கு சென்ற ஒரு ஸ்விஃப்ட் டிசையர் கார் தவறான திசை வழியாக நெடுஞ்சாலைக்குள் நுழைந்து, நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எர்டிகா மீது மோதியது.
6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்
ஸ்விஃப்ட் டிசையர் கார் மோதிய வேகத்தில் எதிரே வந்த எர்டிகாவானது காற்றில் பறந்து சென்று, நெடுஞ்சாலையில் இருந்த தடுப்புக் கம்பி மீது பலமாக மோதியது. இதனால், அதில் இருந்த பயணிகளும் காருக்கு வெளியே வீசி எறியப்பட்டனர். 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இரத்தம் தோய்ந்த உடல்கள் நெடுஞ்சாலையில் கிடப்பதை சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோக்கள் காட்டுகின்றன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சமுருத்தி நெடுஞ்சாலை போலீசார் மற்றும் ஜல்னா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கார்களை அகற்றுவதற்காக கிரேன் ஒன்று இயக்கப்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.