தேர்தல் ஆணையர் புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரவைச் செயலகம் மறுப்பு: RTI தகவல்கள் வெளிப்படுத்துவது என்ன?
செய்தி முன்னோட்டம்
தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிக்கு எதிராக இரண்டு தேர்தல் ஆணையர்கள் அளித்த தனிநபர் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரவை செயலகம் மறுத்துள்ளது. இது தொடர்பான விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் வாயிலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் லோகேஷ் கே பட்டாரா (ஓய்வு பெற்ற கமாடோர்) தாக்கல் செய்த மனுவிற்கு அளிக்கப்பட்ட பதிலில், மத்திய அமைச்சரவைச் செயலகத்தின் முக்கிய குறிப்புகள் தெரியவந்துள்ளன.
புகார்
தேர்தல் ஆணையர்களின் புகார்
கடந்த ஜூலை 29 அன்று, தேர்தல் ஆணையத்தின் மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மனீஷ் கார்க்கிற்கு எதிராக, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் டி.வி. சோமநாதனுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியிருந்தனர்.
நிர்வாகப் பொறுப்பை தற்காலிகமாக கவனித்த மனீஷ் கார்க், தேர்தல் ஆணையம் மற்றும் உயர் அதிகாரிகளுடன் எந்தவித முன்னறிவிப்போ அல்லது ஆலோசனையோ செய்யாமல், வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் தொடர்பான முக்கியப் பணிகள் உள்பட பல்வேறு பணி ஒதுக்கீடுகளை தன்னிச்சையாக மாற்றியமைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இது 2023-ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையர்கள் சேவை விதிமுறைகளுக்கு முரணானது என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
நடவடிக்கை
தனிநபர் கடிதம் எனக் கூறி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பு
RTI-க்கான பதிலில், வெளியான தகவல்களின்படி, தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையாகவும் வெளிப்படையாகவும் செயல்படக் கூடிய ஒரு சுதந்திரமான அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.
அதில் நிர்வாகத் தலையீடு இருக்கக்கூடாது என அமைச்சரவை கருதியதாகக்கூறப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையர்கள் இருவரும் தங்களது தனிப்பட்ட முறையில் மட்டுமே இந்த புகார்களை அனுப்பியுள்ளனர். ஆணையத்தின் ஒட்டுமொத்த அதிகாரப்பூர்வ கடிதமாக இது வராததால், இதன் மீது நேரடியாக நடவடிக்கை எடுப்பது ஒரு அரசியலமைப்பு அமைப்பின் செயல்பாட்டில் தலையிடுவதாக அமையும் எனக்கூறி அமைச்சரவைச் செயலகம் நடவடிக்கையைத் தவிர்த்துள்ளது.
அதேவேளையில், இந்த விவகாரம் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட அதிகாரியின் எதிர்காலப் பணி மாற்றங்கள் குறித்து முடிவெடுக்கும்போது இந்த புகார் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
விளக்கம்
தேர்தல் ஆணையத்தின் தெளிவுரை
இதனிடையே, செப்டம்பர் 26 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கத்தில், மனீஷ் கார்க் பிறப்பித்த பணி ஒதுக்கீட்டு உத்தரவுகள், இரு ஆணையர்களின் வழிகாட்டுதலின்படி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தது.
மேலும், இந்தக் கடிதங்கள் அயல் பணியில் (Deputation) வந்த அதிகாரி தொடர்பானதே தவிர, தேர்தல் ஆணையத்தின் கொள்கை முடிவுகள் சார்ந்தவை அல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.