ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜார்கண்ட் மாநில புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் இன்று(பிப்.18) சனிக்கிழமை பதவியேற்க உள்ளார். இதற்காக இவர் நேற்று(பிப்.,17) சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து அவர் விமானத்தில் ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய ஜனாதிபதி, இந்திய பிரதமர் ஆகியோர் ஒட்டுமொத்த தமிழகத்தின் மீது வைத்துள்ள பாசத்துக்கும் அன்பிற்கும் தந்துள்ள பெருமைக்குரிய பரிசாக இதனை நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் பெருமையை உலகம் உணர்கிற வகையில் அங்கு வாழும் ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றுவது தான் என்னுடைய குறிக்கோளாக இருக்கும் என்றும் கூறினார்.
பா.ஜ.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் சி.பி.ராதாகிருஷ்ணன்
தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் பதவியை செற்றபின்னர் ஜார்கண்ட்-தமிழகம் இடையே பாலமாக இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றும் கூறியுள்ளார். அதன் பின்னர் அவர் விமானம் மூலம் ராஞ்சிக்கு சென்றடைந்தார். ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அரசியல் சார்ந்தோ, அரசு அமைப்புகளில் எவ்வித பதவியிலும் இருக்க கூடாது என்பது விதிமுறை ஆகும். எனவே கடந்த 15ம் தேதியன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு சென்று சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தெரிவித்து கடிதம் ஒன்றினை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.