பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ்
செய்தி முன்னோட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணைக்காக ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை கோரி ஐந்து நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு டெல்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.
இந்தோனேசியா, பல்கேரியா, மங்கோலியா, கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் நடந்த போட்டிகளின் போது பிரிஜ் பூஷன் தங்களை துன்புறுத்தியதாக பெண் மல்யுத்த வீரர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
அதனால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் பிரிஜ் பூஷனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்ட போதே டெல்லி போலீசார் இந்த நோட்டீஸ்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த செய்தி தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
துப்பிவிட
200க்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது
வரும் வியாழக்கிழமைக்குள் பிரிஜ் பூஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரம், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களிடம், போலீஸ் விசாரணை காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும் என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை, அந்த 5 நாடுகளிடம் இருந்தும் கோரப்பட்ட ஆதாரங்கள் வரும் வியாழக்கிழமைக்குள் கிடைக்கவில்லை என்றால், துணை குற்றப்பத்திரிகை ஒன்று அதற்கு பிறகு தனியாக தாக்கல் செய்யப்படும்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக போராட்டக்காரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் WFIயில் வேலை செய்யும் சிங்கின் நண்பர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.