மும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு இன்று(டிச.,26) காலை வந்த மின்னஞ்சலில், இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகம், ஐசிஐசிஐ, எச்டிஎப்சி உள்ளிட்ட வங்கிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்படவுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதே போல் மிரட்டல் மும்பையில் செயல்படும் வேறு சில தனியார் வங்கிகள் என 11க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சோதனை மேற்கொண்டதில் வெறும் வதந்தி என்று தெரியவந்துள்ளது
இது குறித்து தகவலறிந்த மும்பை காவல்துறை மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக வெடிகுண்டினை கண்டறியும் மெட்டல் டிடக்டர்கள், மோப்ப நாய்கள் உள்ளிட்டவைகளோடு சென்று சோதனை செய்துள்ளனர். ஆனால் நடத்தப்பட்ட சோதனையில் ஏதும் கிடைக்காததால் இந்த மிரட்டல் வெறும் வதந்தி தான், யாரும் அச்சமடைய தேவையில்லை என்பது தெரியவந்துள்ளது. எனினும், இத்தகைய மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியது யார்? என்று காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிய வந்த நிலையில், ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் அதிர்ச்சியுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.