கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு: தாய்லாந்து விமானத்தில் லிப்ஸ்டிக்கால் வெடிகுண்டு மிரட்டல்
செய்தி முன்னோட்டம்
தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானம் ஒன்றின் கழிப்பறை கண்ணாடியில், லிப்ஸ்டிக்கால் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் செய்தி கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அதைத் தூய்மைப்படுத்த சென்ற பணியாளர்கள் கண்ணாடியில் எழுதப்பட்டிருந்த எச்சரிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் விமானத்தைத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குக் கொண்டு சென்று தீவிர சோதனை மேற்கொண்டதில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், இது ஒரு புரளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீவிர சோதனை
தனிமைப்படுத்தப்பட்ட விமானம்
விமானம் கொல்கத்தாவில் தரை இறங்கியதும் கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சென்ற விமானப் பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்கள், அங்குள்ள கண்ணாடியில் "விமானத்திற்குள் வெடிகுண்டு உள்ளது" என்று லிப்ஸ்டிக் கொண்டு எழுதப்பட்டிருந்ததைக் கண்டு விமானிக்கும், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்ட பிறகு, விமானம் தொலைவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் விமான நிலையக் காவல்துறையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாகச் சோதனையிட்டனர்.
நீண்ட நேர ஆய்வுக்குப் பிறகு எவ்வித சந்தேகத்திற்குரிய பொருட்களும் கிடைக்காததால் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தேவையின்றி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவே இந்தசெயல் செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தொடரும் மிரட்டல்கள்
ஒரே மாதத்தில் மூன்றாவது முறை
கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரே மாதத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
இதற்கு முந்தைய நாள் (வெள்ளிக்கிழமை) விமான நிலையத்தின் 30-வது போர்டிங் கேட் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாகப் பெண்கள் கழிப்பறையில் உள்ள டிஷ்யூ பேப்பரில் கைப்பட எழுதப்பட்ட மிரட்டல் கடிதம் ஒன்று சிக்கிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 8-ஆம் தேதியன்றும் மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
தற்போது தாய்லாந்து விமானத்தில் லிப்ஸ்டிக்கால் மிரட்டல் செய்தி எழுதிய நபரை அடையாளம் காணும் வகையில், விமானத்தில் பயணித்த பயணிகளின் பட்டியல் மற்றும் விமான நிலைய சிசிடிவி கேமரா காட்சிகளை பிதான்நகர் காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.