ஆபரேஷன் விங்ஸ் ஆஃப் டான்: இந்தியா - இஸ்ரேல் இடையிலான விசித்திரமான மனிதாபிமான நடவடிக்கை; பல்லாண்டுகால வரலாற்றுப் பின்னணி
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல் அரசு, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் பினை மெனஷே (Bnei Menashe) சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பேரை இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லும் ஆபரேஷன் விங்ஸ் ஆஃப் டான் (Operation Wings of Dawn) எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக, 250 பேர் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை டெல்லி வழியாக இஸ்ரேலுக்கு ஏர்லிஃப்ட் செய்யப்பட்டனர். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒப்புதலுடன், இந்த சமூகத்தினரை ஆண்டுக்கு 1,200 பேர் வீதம் இஸ்ரேலுக்குக் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னணி
யார் இந்த பினை மெனஷே சமூகத்தினர்?
பைபிளின் வரலாற்றுப்படி, பண்டைய இஸ்ரேலின் 12 பழங்குடியினரில் மெனஷே என்பவரின் சந்ததியினர் என இவர்கள் தங்களை அழைத்துக்கொள்கின்றனர். கிமு 722ல் அசிரியர்களால் நாடு கடத்தப்பட்ட இவர்கள், பெர்சியா, ஆப்கானிஸ்தான், திபெத் மற்றும் சீனா வழியாகப் பயணித்து, இந்தியாவின் மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் குடியேறியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் யூத மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றினாலும், வடகிழக்கு இந்தியாவில் குக்கி பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இஸ்ரேலைத் தங்களின் 'வாக்குறுதியளிக்கப்பட்ட பூமி' (Promised Land) என்று கருதுகின்றனர்.
இஸ்ரேல்
ஏன் இஸ்ரேல் நோக்கிச் செல்ல விரும்புகிறார்கள்?
இந்தியாவின் தொலைதூர மலைப்பகுதிகளில் வசிக்கும் இவர்களுக்கு மத வழிபாட்டுக்கான கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன. யூத மத சடங்குகளைப் பின்பற்றுவதற்குத் தேவையான பத்து வயது வந்தோருக்கான குவோரம் (Minyan) அங்கு கிடைப்பது கடினம். மேலும், மணிப்பூரில் சமீபகாலமாக நிலவும் மெய்தி-குக்கி இன மோதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளன. உயர்தரக் கல்வி, சிறந்த பொருளாதார வாய்ப்புகள் மற்றும் அவர்களின் மத அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கம் ஆகியவை இவர்கள் இஸ்ரேல் செல்ல முக்கிய காரணங்களாகும்.
இஸ்ரேல் நோக்கம்
இஸ்ரேலின் நோக்கம் என்ன?
போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், தற்போது தொழிலாளர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. கட்டுமானத் துறை மற்றும் இதர துறைகளில் பணியாற்றுவதற்கு பினை மெனஷே சமூகத்தினர் உதவக்கூடும் என்று இஸ்ரேல் கருதுகிறது. மேலும், வடக்கு இஸ்ரேல் மற்றும் கலிலி பகுதிகளில் இவர்களைக் குடியேற்றுவதன் மூலம், அந்தப் பகுதிகளில் மக்கள் தொகையைச் சமநிலைப்படுத்தவும், பாதுகாப்பு அரண்களை வலுப்படுத்தவும் இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சமூகத்தைச் சேர்ந்த பாதிப்பேர் ஏற்கனவே இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டனர். முந்தைய போர்களின்போது, இவர்களில் பலர் இஸ்ரேலிய ராணுவத்தில் முன்னணியில் நின்று பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.