பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் திடீர் ஒத்திவைப்பு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்னும் தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த நடைப்பயணமானது பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் நிலையில் இடையில் சில தினங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி 3ம் கட்டமான அவரின் நடைபயணம் 4ம் தேதி(இன்று) நடக்கவிருந்தது. இந்நிலையில், பாஜக-அதிமுக கூட்டணி முறிவு விவகாரம் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேச அண்ணாமலை டெல்லி சென்றார். அதனால் இந்த நடைப்பயணம் வரும் 6ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
2 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை
இந்நிலையில் தற்போது இந்த நடைப்பயணமானது வரும் அக்.,16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பாஜக.,தெரிவித்துள்ளது. இதுகுறித்து இக்கட்சி எக்ஸ் தளத்தில், "மாநிலத்தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் 6ம் தேதி துவங்கவிருந்த நிலையில், மாநில தலைவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நல குறைவால் வரும் அக்.16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. திட்டமிட்டபடி நாளை(அக்.,5) மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடக்கும். விரைவில் திருத்தப்பட்ட நடைப்பயண விவர பட்டியல் வெளியிடப்படும்" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அண்ணாமலையின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. அதில், அவருக்கு தொண்டைவலி, உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளதாகவும், அவர் 2 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன .