சமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று(பிப்.,23) நடந்தது. இதில் திருமாவளவன் பேசுகையில், அண்மை காலமாக வன்முறைகளை தூண்டும் தரம்கெட்ட பேச்சுக்கள், ஆபாசமான விமர்சனங்கள் , வீம்புக்கு வம்பிழுப்பது, வீணான அவதூறுகள் மூலம் சமூக அமைதியை கெடுப்பது போன்றவைகளை பாஜக நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டி பேசினார். மேலும் பேசிய அவர், வடமாநிலங்களில் செய்யும் அரசியலை போல தமிழகத்திலும் செய்து தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற சதித்திட்டம் தீட்டுகிறது பாஜக என்றும் அவர் கூறினார். தொடர்ந்து, சனாதன பயங்கரவாதிகளின் இத்தகைய சதியை முறியடித்து தமிழகத்தில் சமூக அமைதியை, மத நல்லிணக்கத்தை காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தோழமை கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்க அழைப்புவிடுக்க முடிவு
இதனையடுத்து விசிக தலைமை நிர்வாக குழு கூட்ட தீர்மானம் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அது குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு முயலும் பாஜக'வை கண்டித்து வரும் பிப்.,28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்க அழைப்புவிடுக்க போவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து அதனை செயல்பட விடாமல் முடக்குவதற்கு தமிழகத்தில் திட்டமிடப்பட்ட படி பாஜகவும் அதன் அமைப்புகளும் செயல்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.