ம.பி., ராஜ்., சத்தீஸ்கர் தேர்தல் வெற்றி; புதிய முகங்களை முதல்வராக்க திட்டமிடும் பாஜக
சமீபத்திய தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி (BJP) தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வர் பதவிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கட்சியின் உயர்மட்டத் தலைமை, இந்த பதிவுக்கான சாத்தியமான போட்டியாளர்களைப் பற்றி விவாதிப்பதற்காக மீண்டும் மீண்டும் கூட்டங்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த மாநிலங்களில் மக்களால் அதிகமாக விரும்பப்படும், அதே நேரத்தில் புதிய முகங்களைத் தேர்வு செய்யவும் பாஜக திட்டமிட்டுள்ளது என்று NDTV தெரிவித்துள்ளது.
முதல்வர் தேர்வு குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் பெருந்தலைகள்
கடந்த செவ்வாயன்று, பிரதமர் மோடியின் இல்லத்தில் பாஜக கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், 4-1/2மணிநேரம் சந்திப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. வெற்றி பெற்ற மாநிலங்களில், முதல்வர் பதவிக்கான அனைத்து முக்கிய வேட்பாளர்கள் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பிரதமர் மோடி உட்பட உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் JPநட்டா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு முன்னதாக அமித்ஷாவும், நட்டாவும், பிஜேபியின் மாநில பொறுப்பாளர்களுடன், உள்ளூர் தலைவர்கள் பற்றிய கருத்துக்களை கேட்டறிந்துள்ளனர். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு பாஜக விரைவில் பார்வையாளர்களை நியமிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பார்வையாளர்கள் இந்த மாநிலங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டங்களை மேற்பார்வையிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
3 மாநிலங்களுக்கு முதல்வர் வாய்ப்பு அதிகம் யாருக்கு உள்ளது?
ம.பி.,யில், சிவராஜ் சிங் சவுகான், மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவரைத்தவிர மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் படேல், ஜோதிராதித்ய சிந்தியா, நரேந்திர சிங் தோமர் மற்றும் மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோரும் தேர்வு பட்டியலில் உள்ளனர். ராஜஸ்தானைப் பொறுத்தவரை, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா , மத்திய அமைச்சர்கள் கஜேந்திர ஷெகாவத், அர்ஜுன் மேக்வால், மாநில முதல்வர் சிபி ஜோஷி, மாநில கட்சி தலைவர்கள் தியா குமாரி, மஹந்த் பாலக்நாத் ஆகியோர் அடங்குவர். சத்தீஸ்கரில், முன்னாள் முதல்வர் ராமன் சிங், மாநில பாஜக தலைவர் அருண் குமார் சாவ், தரம்லால் கவுசிக், முன்னாள் நிர்வாகி ஓ.பி.சௌத்ரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.