ராஜஸ்தானில் முன்னிலை வகிக்கும் பாஜக; முதல்வர் பதவி யாருக்கு?
நான்கு மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் ஆட்சியமைப்பது குறித்து செய்தியாளர்களிடம் தன் கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராஜவர்தன் சிங் ரத்தோர். ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெரும் என்றும், அதன் பின்பு ஆட்சியமைப்பது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார் அவர். மேலும், இந்த தேர்தல் முடிவு என்பது ஒரு கூட்டு முயற்சி எனவும், கட்சித் தலைமை சரியான முடிவையே எடுக்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ராஜஸ்தானின் முதல்வர் பதவி யாருக்கு?
1993ம் ஆண்டு ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்பு ஒவ்வொரு தேர்தலிலும், காங்கிரஸூம், பிஜேபியும் ஒவ்வொரு முறையும் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றன. தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலோட்டே முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். ஆனால், இன்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 101 இடங்கள் தேவைப்படும் நிலையில், 114 இடங்களில் பாஜகவும், 70 இடங்களில் காங்கிரஸூம், 15 இடங்களில் இதர வேட்பாளர்கலும் முன்னிலை வகித்து வருகின்றனர். எனவே, இந்த முறை பாரதிய ஜனதா கட்சியே பெரும்பான்மையைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானில் பாஜகவின் முகம்:
2003 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றிய போது, அக்கட்சியைச் சேர்ந்த வசுந்தரா ராஜேவே முதல்வராக பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். மேலும், 2003ம் ஆண்டிலிருந்தே ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவின் முகமாகவும் அவரே செயல்பட்டு வருகிறார். எனவே, இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் அவரே இந்த முறையும் அம்மாநில முதல்வராக அமர்த்தப்படுவார் எனத் தெரிகிறது. வசுந்தரா ராஜேவைத் தவிர, ராஜஸ்தான் எம்பி தியா குமாரி, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரது பெயர்களும் ராஜஸ்தான் மாநில முதல்வருக்கான பரிந்துரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.