முதல்வர் ஸ்டாலினை கஞ்சா பொட்டலத்துடன் சந்திக்க வந்த பாஜக நிர்வாகி; மதுரையில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடந்து முடிந்தாலும், மாநிலத்தில் இன்னும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலிலேயே உள்ளது. இதன் காரணமாக புதிய திட்டங்களை அறிவிக்கவோ செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்தோடு ஓய்வெடுக்க கொடக்கானலுக்கு சென்றுள்ளார். கொடைக்கானல் செல்வதற்காக மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய தமிழக முதல்வரிடம், பாஜக ஓ பி சி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி என்பவர் சந்தித்து மனு கொடுக்க முற்பட்டார். அப்போது அவரை சோதித்த செக்யூரிட்டி ஆஃபீஸர்ஸ், அவர் கஞ்சா பொட்டலம் இருந்ததை பார்த்து, அவரை அதிரடியாக சுற்றி விளைத்தனர்.
போதைபொருள் புழக்கம் அதிகரித்ததை குறிக்க முதல்வரிடம் கோரிக்கை
அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் சங்கரபாண்டியிடம் கையில் இருந்த மனு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், "தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் தமிழக இளைஞர்கள் மாணவர்கள் ஏழை கூலி தொழிலாளர்கள் சிறுவர்கள் முதல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்". "இதனால் தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் குற்ற செயல் அதிகரித்து வருகிறது இது மிகவும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்கள் நலன் கருதி துரிதமாக நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் பழக்கத்தை தடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.