மற்ற கட்சிகளை விட பாஜகவின் கார்பரேட் நன்கொடை 7 மடங்கு அதிகம்: ADR
2021-22ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சிக்கு கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.548.808 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இது மற்ற அனைத்து தேசிய கட்சிகளும் அறிவித்த மொத்த கார்பரேட் நன்கொடைகளை விட(ரூ. 77.075 கோடி) ஏழு மடங்கு அதிகம் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின்(ADR) கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, பாஜகவின் மொத்த நன்கொடை ரூ.614.6 கோடியாக இருந்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் நன்கொடை ரூ. 95.4 கோடியாக உள்ளது. பல ஆண்டுகளாக மற்ற கட்சிகளை விட பாஜக அதிக நன்கொடைகளை பெற்று வருகிறது. அதானி குழுமத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடியின் அரசு செய்யப்பட்டு வருவதாக பாஜகவிற்கு எதிரான குற்றசாட்டுகள் எழுந்துள்ள சமயத்தில் இந்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
காங்கிரஸை விட 85% அதிக நன்கொடை பெற்ற பாஜக
ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் ரூ.20,000 மேல் கிடைக்கும் வருமானத்தை அவை தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்ட வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கிறது. 2,068 கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது வணிக நிறுவனங்கள் பாஜகவுக்கு மொத்தம் ரூ.548.808 கோடி நன்கொடை வழங்கியுள்ளன. 2021-22 நிதியாண்டில், பாஜகவுக்கு ரூ.65.774 கோடி தனிநபர் நன்கொடைகள் மூலம் கிடைத்திருக்கிறது. மறுபுறம், 170 கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது வணிக நிறுவனங்கள் காங்கிரஸுக்கு மொத்தம் ரூ.54.567 கோடி நன்கொடை வழங்கியுள்ளன. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.40.892 கோடி தனிநபர் நன்கொடைகள்(1,085 பேர்) மூலம் கிடைத்திருக்கிறது. 2021-22 நிதியாண்டில், காங்கிரஸை விட பாஜக கிட்டத்தட்ட 85% அதிக நன்கொடைகளைப் பெற்றது என்று ADR தெரிவித்துள்ளது.