அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றது 'பிபர்ஜாய்'
இன்று(ஜூன் 15) குஜராத் கடற்கரையை கடக்க இருக்கும் 'பிபர்ஜாய்' புயல், அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றுள்ளது. ஜூன் 6 ஆம் தேதி உருவான இந்த புயல் சுமார் 8 நாட்களாக அரபிக்கடலில் நிலைகொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்(IMD) தரவுகளின்படி, 1965க்குப் பிறகு ஜூன் மாதத்தில் குஜராத்தை தாக்க இருக்கும் மூன்றாவது புயல் இதுவாகும். இதற்கு முன்பு, 1996 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் மிக பெரும் புயல்கள் ஜூன் மாதத்தில் குஜராத்தை தாக்கின. அதிலும், 1998இல் பதிவான புயல் மிக அதிதீவிரமான புயலாகும். இந்த புயல் மணிக்கு 160 கிமீ வேகத்தில் போர்பந்தர் கடற்கரையைத் தாக்கியது. இதனால், 1,176 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதம் குஜராத் கடற்கரையைத் தாக்கும் முதல் புயல்
அதிதீவிரமான பிபர்ஜாய் புயல் குஜராத்தின் மாண்ட்வி மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும் போது மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதம் குஜராத் கடற்கரையைத் தாக்கும் முதல் புயல் இதுவாகும். அரபிக் கடலில், 1965இல் இருந்து 2023வரை பிபர்ஜாய் புயலை தவிர 13 புயல்கள் உருவாகி இருக்கின்றன.( ஜூன் மாதத்தில் மட்டும்) இவற்றில் ஆறு புயல்கள் அரபிக்கடலிலேயே வலுவிழந்துவிட்டது, இரண்டு புயல்கள் குஜராத் கடற்கரையைக் கடந்தன. மகாராஷ்டிரா, பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒரு புயல் கரையை கடந்திருக்கிறது. அவற்றுள், 2019இல் உருவான 'கியார்' புயல் மிகவும் ஆபத்தான புயலாக கருதப்பட்டது.