அம்பாசமுத்திரம் பகுதியில் உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் - தமிழக அரசு
தமிழகத்தில் அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுசூழல் பூங்காவுடன் கூடிய உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் உருவாக்குவதற்கான அரசாணையினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அகஸ்தியமலை யானைகள் காப்பகத்தில் சுற்றுசூழல் பூங்காவுடன் கூடிய உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு சுற்றுசூழல், காலநிலை மாற்றம், வனத்துறை சார்பில் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் 1976ம்ஆண்டு அமைக்கப்பட்ட முதல் புலிகள் காப்பகம் இதுவாகும். இந்த காப்பகம் 150உள்ளூர் தாவரங்கள் உட்பட 2000க்கும் மேற்பட்ட தாவரங்களின் தாயகம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பிலிருந்து 14ஆறுகள் தோன்றுவதால் இது 'நதிகள் சரணாலயம்' என்றும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.
அரசின் முயற்சிகளில் முக்கிய அடையாளமாக அமையவுள்ளது
இந்த பாதுகாப்பு மையமானது அகஸ்தியமலை யானைகள் காப்பகம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவற்றை பாதுகாக்கும் அரசின் முயற்சியில் ஓர் முக்கிய அடையாளமாக இது அமையவுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த பொழுது தமிழக முதல்வர் 700 கோடி ரூபாய் செலவில் களக்காடு முண்டந்துறை பகுதியில் சுற்றுசூழல் பூங்கா அமைக்கப்படும் என ஓர் அறிவிப்பினை வெளியிட்டார். இதனை தொடர்ந்து தற்போது இந்த அரசாணை வெளியாகியுள்ளது. இந்த திட்டமானது நிலையான சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மக்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.