
பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் மசோதா விரைவில் செயல்படுத்தப்படும்: அமித்ஷா
செய்தி முன்னோட்டம்
பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான தரவுகளை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று(மே 23) தெரிவித்தார்.
இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையரின் அலுவலகமான 'ஜனகனனா பவனை' திறந்து வைத்த அமைச்சர் அமித்ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் வளர்ச்சியில் பங்குவகிக்கும் என்று கூறினார்.
முழுமையான மற்றும் துல்லியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் பல்வேறு பலன்களைக் கொண்டிருக்கும் என்றும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் திட்டமிட்டால், ஏழை எளிய மக்களையும் வளர்ச்சி அடைய செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
details
பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம்(RBD)-1969 திருத்த மசோதாவால் ஏற்படும் நன்மைகள்
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டால், வளர்ச்சிப் பணிகளை முறையாகத் திட்டமிட முடியும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
"இறப்பு மற்றும் பிறப்பு பதிவேட்டை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நடைமுறையின் கீழ், ஒருவருக்கு 18 வயது நிறைவடையும் போது, அவரது பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். அதேபோல், ஒருவர் இறந்தால், அந்தத் தகவல் தானாகவே தேர்தல் ஆணையத்துக்குச் சென்றுவிடும். இதனால் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவரின் பெயரை நீக்கும் பணியை விரைவாக தொடங்க முடியும்." என்று அமித்ஷா கூறியுள்ளார்.
இந்த திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டால், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் அரசின் நலத்திட்டங்களை பெறுவது எளிதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.