இந்திய AI மாநாட்டில் திடீரென பில் கேட்ஸ் உரை ரத்து; எப்ஸ்டீன் சர்ச்சை காரணமா?
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 மாநாட்டில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இன்று ஆற்றவிருந்த சிறப்புரை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் கேட்ஸ் உரையாற்றுவார் என்று கேட்ஸ் அறக்கட்டளை நேற்று உறுதி செய்திருந்த நிலையில், இன்று இந்த திடீர் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. "கவனமாகப் பரிசீலித்த பிறகு, ஏஐ மாநாட்டின் முக்கிய முன்னுரிமைகளில் இருந்து கவனம் சிதறாமல் இருப்பதை உறுதி செய்ய, திரு. கேட்ஸ் தனது உரையை நிகழ்த்த மாட்டார். அவருக்குப் பதிலாக கேட்ஸ் அறக்கட்டளையின் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அலுவலகத் தலைவர் அன்குர் வோரா பங்கேற்பார்" என கேட்ஸ் அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
பின்னணி
சர்ச்சைகளும் பின்னணியும்
எப்ஸ்டீன் விவகாரம்: பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் (Epstein files) பில் கேட்ஸின் பெயர் பலமுறை இடம்பெற்றுள்ளது தொடர்பாக இணையதளங்களில் அவருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூக வலைதள எதிர்ப்பு: இந்தியாவுக்கான அவரது வருகை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஆந்திரா பயணம்: முன்னதாக இந்த வார தொடக்கத்தில் ஆந்திர மாநிலம் அமராவதிக்குச் சென்ற பில் கேட்ஸை, அமைச்சர் நார லோகேஷ் நேரில் வரவேற்றார். அந்த பயணம் சிறப்பாக அமைந்தாலும், டெல்லி மாநாட்டில் அவர் பங்கேற்பது குறித்துத் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வந்தது. ஏஐ மாநாட்டின் நோக்கம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.