பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: மண்ணை கவ்வுகிறதா பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ்'?
செய்தி முன்னோட்டம்
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது உறுதியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில், அரசியல் வியூக நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள பிரசாந்த் கிஷோர் தலைமையிலான 'ஜன் சுராஜ் கட்சி' (Jan Suraaj Party) மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியின் அரசியல் வியூக அமைப்பாளரும் பிரசாந்த் கிஷோர் என்பதும் குறிப்பிடதக்கது. தவெக வரும் 2026 தேர்தலை இவரின் வழிநடத்தலில் கீழ் சந்திக்கவுள்ளது. இந்த நிலையில் தான் ஜன் சுராஜ் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கவுள்ளது.
ஏமாற்றம்
ஏமாற்றத்தில் ஜன் சுராஜ்
மாநிலத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக களமிறங்கிய ஜன் சுராஜ் கட்சி, மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் போட்டியிட்ட போதும், தற்போது வரை ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. தேர்தலுக்கு முன்பாக, பிரசாந்த் கிஷோர் தனது கட்சி "ஒன்று 150 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெறும் அல்லது 10 இடங்களுக்கும் குறைவாக வெற்றி பெறும்" என்று சவால் விடுத்திருந்தார். "ஜன் சுராஜ் உயரும் அல்லது வீழும், இடையில் ஒரு நிலை இல்லை" என்ற அவர் கூறியதைப்போலவே, தற்போதைய நிலவரப்படி அவரது கட்சி அதல பாதாளத்தில் உள்ளது. முன்னதாக, அனைத்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும், இவருக்கு 0 முதல் 3 இடங்கள் வரை மட்டுமே வெற்றி கிடைக்கும் என கணித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.