பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025: 180+ தொகுதிகளில் NDA கூட்டணி அமோக முன்னிலை
செய்தி முன்னோட்டம்
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான போக்குகளின்படி, மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட மிக அதிகளவில் முன்னிலை வகித்து, ஆட்சியை தக்கவைக்கும் நிலையில் உள்ளது. மதியம் 12:20 மணி நிலவரப்படி முக்கியத் தகவல்கள்: 185+ தொகுதிகளில் தேஜகூ (பாஜக 84, ஐக்கிய ஜனதா தளம் (JDU) 75, லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) 22 மற்றும் பிற கட்சிகள்) முன்னிலை. அதே நேரத்தில் மகா கூட்டணி (Mahagathbandhan) கூட்டணி, (ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) 36, காங்கிரஸ் 7, மற்றும் பிற கட்சிகள்) 49 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அரசியல் நிலை
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் மற்றும் முக்கிய போட்டியளார்கள் நிலை
இந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறுவதற்கு கட்சிகள் குறைந்தது 122 இடங்களில் பெரும்பான்மையை பெறவேண்டும். இந்த தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக பார்க்கப்படும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், தனது தொகுதியான ராகோபூரில் (Raghopur) பின்னடைவை சந்தித்துள்ளார். அதேபோல, அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், மகுவா தொகுதியிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன்கள் ஆவர். இந்த சூழலில் பாஜக வேட்பாளர் மைதிலி தாக்கூர், அலினகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 180 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெறுவதன் மூலம், பீகாரில் மீண்டும் ஒருமுறை ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.