ஆட்டோவில் ஏற மறுத்தவர் மீது ஆட்டோவை விட்டு ஏற்றிய ஆட்டோ ஓட்டுநர்
பெங்களூர் HSR லேஅவுட்டில் அசார் கான் என்ற நபர், ஒரு ஆட்டோ ஓட்டுநரால் நேற்று அதிகாலை தாக்கப்பட்டார். அசார் கான், குற்றம்சாட்டப்பட்டவரின் ஆட்டோவில் சவாரி செய்ய மறுத்துவிட்டு, அதற்கு பதிலாக ரேபிடோ பைக் டாக்ஸியைத் தேர்ந்தெடுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தின் போது டிரைவர் குடிபோதையில் இருந்ததாக அசார் கான் தெரிவித்துள்ளார். இந்த வேதனையான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட அசார் கான், "நேற்றிரவு 3:00 மணிக்கு நான் ரேபிடோ பைக் செயலி மூலம் சவாரியை புக் செய்திருந்தேன். அப்போது, குடிபோதையில் பெங்களூர் HSR லேஅவுட் செக்டார் 1க்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவை என் மீது மோதினார். என்னை ஆட்டோவில் அடித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்." என்று தெரிவித்துள்ளார்.
தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை பிடிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்
அசார் கான், இந்த சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ காட்சியில், அசார் கான் குற்றம்சாட்டப்பட்ட ஆட்டோ ஒட்டுநருடன் சிறிது நேரம் பேசி கொண்டிருப்பது தெரிகிறது. அதற்கு பிறகு, அவர் ஆட்டோவை விட்டு கொஞ்சம் தள்ளி வந்து நின்று கொள்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர், திடீரென தனது வாகனத்தை ஸ்டார்ட் செய்து வேண்டுமென்றே அசார் மீது மோதிவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். சிசிடிவி ஆதாரம் மற்றும் அசாரின் முறையான புகாரின் அடிப்படையில் மடிவாலா போக்குவரத்து போலீசார் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை பிடிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.