பெங்களுரில் உலவும் சிறுத்தையால் பரபரப்பு: உங்கள் பகுதியில் சிறுத்தையைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?
கடந்த சில நாட்களாக பெங்களூரில் உலவி திரியும் சிறுத்தையை பிடிக்க சிசிடிவி ட்ரோன் கேமராக்கள் மற்றும் பொறி கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சிறுத்தை பிடிக்கப்படும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும், முடிந்தவரை குழந்தைகளை வீட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் வனவிலங்கு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். "சிறுத்தையை பிடிக்க நான்கு பொறிகளை அமைத்துள்ளோம். அது கடைசியாக காணப்பட்ட இடம் பன்னர்கட்டா தேசிய பூங்காவில் இருந்து 10 கிமீ தொலைவில் இருப்பதால் அந்த சிறுத்தை மீண்டும் வரக்கூடும். எலக்ட்ரானிக் சிட்டி, HSR லேஅவுட் மற்றும் பன்னர்கட்டாவை சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்." என்று வனத்துறை துணைப் பாதுகாவலர்(பெங்களூரு நகர்ப்புற பிரிவு) ரவீந்திர குமார் கூறியுள்ளார்.
சிறுத்தையை பார்த்தால், நீங்கள் செய்ய வேண்டியவை
நீங்கள் சிறுத்தையை பார்த்தால் பீதி அடையவோ அல்லது அந்த விலங்கை தாக்கவோ வேண்டாம். அப்படி செய்தால் சிறுத்தைக்கு கோபம் உண்டாகி அது மனிதர்களை தாக்க வாய்ப்பிருக்கிறது. அமைதியாக இருங்கள், முடிந்தவரை சிறுத்தையிடம் இருந்து விலகி இருங்கள். எந்த காரணத்திற்காகவும் அதை நீங்களே பிடிக்க முயற்சிக்காதீர்கள். முக்கியமாக குழந்தைகளை இப்போதைக்கு வெளியே அனுப்ப வேண்டாம். முதற்கட்டமாக வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக 1926 என்ற உதவி எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும். சிறுத்தைகள் பதுங்கி இருக்கும் இடத்திற்கு அருகில் யாராவது தெரிந்தோ தெரியாமலோ சென்றால், அது பயத்தில் தாக்க ஆரம்பிக்கும். எனவே, வனவிலங்கு வல்லுநர்கள் அதை பிடிப்பது தான் நல்லது.