அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூரில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வியாழக்கிழமை (ஜூன் 29) தெரிவித்தார்.
முன்னதாக ஜூன் 23 அன்று, பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள 16 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஒருங்கிணைந்த வியூகத்தை உருவாக்குவது குறித்து விவாதித்தன.
நான்கு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே கடுமையான கருத்துப் பரிமாற்றங்களுடன் முடிவடைந்தது.
இதன் பிறகு, டெல்லியில் மத்திய அரசின் தலையீட்டை பகிரங்கமாக கண்டிக்கும் வரை, எதிர்காலத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்று கூறிவிட்டு ஆம் ஆத்மி விலகிவிட்டது.
oppostion meet shifted from shimla to bengaluru
இரண்டாவது எதிர்க்கட்சி கூட்டம் சிம்லாவிலிருந்து பெங்களூருக்கு மாற்றம்
பாட்னா கூட்டத்தின் முடிவில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணிக்கு வியூகம் வகுப்பதற்கான அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த கூட்டம் தற்போது சிம்லாவில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக சரத் பவார் அறிவித்துள்ளார்.
முதல் கூட்டம் நாட்டின் வடபகுதியில் நடந்துள்ள நிலையில், இரண்டாவது கூட்டத்தை தென்னிந்தியாவில் நடத்துவது தான் சரியாக இருக்கும் என கருதியதால்தான் இடத்தை மாற்றியதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
பொதுவான பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல், 2004ஐ போல் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.