Loading...
பெங்களூருவில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி சோதனை: புகழ்பெற்ற பப் மூடல்; கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
பெங்களூருவில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி சோதனை

பெங்களூருவில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி சோதனை: புகழ்பெற்ற பப் மூடல்; கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 10, 2026
10:33 am

செய்தி முன்னோட்டம்

பெங்களூருவில் உள்ள நட்சத்திர உணவகங்கள் மற்றும் பிரபல கேளிக்கை விடுதிகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், பூஞ்சை பிடித்த கெட்டுப்போன இறைச்சி மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறல்களில் ஈடுபட்ட பிரபல பப் ஒன்று உடனடியாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பெங்களூரு நகர்ப்புறம் மற்றும் பிபிஎம்பி மண்டலங்களில் உணவுப் பாதுகாப்புத் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் 30 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் (FSSAI) விதிமீறல்களில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சீல்

பிரபல பப் மூடல் மற்றும் சுகாதாரச் சீர்கேடு

பெங்களூருவின் மிக ஆடம்பரமான யுபி சிட்டி வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் 'ஸ்கை லவுஞ்ச்' என்ற பிரபல பப்-ல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு சமையலறை மிகவும் சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்பட்டு வந்ததும், பூஞ்சை காளான் பிடித்த அழுகிய கோழி மற்றும் மாட்டிறைச்சிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 10 நாட்களுக்கு முன்பே காலாவதியான பால் மற்றும் தயிர் பயன்படுத்தப்பட்டு வந்தது அம்பலமானது.

இதையடுத்து, சுமார் 45 கிலோ கெட்டுப்போன இறைச்சி, காய்கறி கட்லெட்டுகள் மற்றும் 15 லிட்டர் மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்ததோடு, அந்த பப்-ஐ உடனடியாக மூட உத்தரவிட்டனர்.

ரெய்டு

பிற உணவகங்களில் சிக்கிய காலாவதியான பொருட்கள்

ராயல் செயின் ஹோட்டலில் இருந்து 50 கிலோ வாத்து இறைச்சி மற்றும் 5 கிலோ மீன் என மொத்தம் 55 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல், மெட்ராஸ் கிச்சன் உணவகத்தில் 5 கிலோ பட்டாணியும், டெஸ்கான் ஹோட்டலில் 5 கிலோ காளான்களும், சான்செஸ் உணவகத்தில் காலாவதியான மீன் மற்றும் கேக் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

பெங்களூருவின் முன்னணி உணவகங்களுக்கு உணவு மூலப்பொருட்களை விநியோகிக்கும் 'கோல்ட்மேன் லாஜிஸ்டிக்ஸ்' மற்றும் 'ராதாகிருஷ்ணா ஃபுட்லேண்ட்' ஆகிய சேமிப்புக் கிடங்குகளிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அங்கு காலாவதி தேதி நெருங்கிய பல்வேறு சாஸ் வகைகள் மற்றும் 10 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆய்வகப் பரிசோதனைக்காக உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT