மேற்கு வங்காளத்தில் ஒரு பெண்ணை சரமாரியாக அடித்த அரசியல்வாதி: அடித்தவரை விட்டுவிட்டு வீடியோ பதிவு செய்தவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்
மேற்கு வங்காளத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு ஜோடியை நடு ரோட்டில் வைத்து ஒரு அரசியல்வாதி சரமாரியாக அடிக்கும் சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த ஜோடி கள்ள தொடர்பு வைத்திருந்ததாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவின் உதவியாளர் ஒருவர் அவர்களை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த அரசியல்வாதியின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து, சோப்ராவின் உள்ளூர் திரிணாமுல் தலைவர் தாஜ்முல் என்ற ஜேசிபி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
'வீடியோவை வைரலாக்கியவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்': பாதிக்கப்பட்ட பெண்
இதற்கிடையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண், சோப்ரா பகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவின் உதவியாளர் தன்னைத் தாக்கியதை படம் பிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். "எனது வீடியோவை யார் வைரலாக்கினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. யார் அதை வைரலாக்கினாலும் அதற்கு எதிராக காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளேன். எனது அனுமதியின்றி யாரோ அந்த வீடியோவை வைரலாக்கியுள்ளனர். அவ்வாறு செய்தவர்களுக்கு தண்டனையை உறுதி செய்யுமாறு காவல்துறையிடம் முறையிட்டுள்ளேன். காவல்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.