பஞ்சாபில் உள்ள பதிண்டா இராணுவ நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: என்ன நடக்கிறது
பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் இன்று(ஏப் 12) நடந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, இது ராணுவ பணியாற்றிவர்களின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வெடிமருந்துகளுடன் கூடிய துப்பாக்கி கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போனதால், இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவ நிலையத்திற்குள் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தை அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், பீரங்கி படையைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக INSAS துப்பாக்கி மற்றும் 28 ரவுண்டு தோட்டாக்கள் காணாமல் போனதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
வெளி ஆட்கள் உள்ளே வந்திருக்க வாய்ப்பில்லை: ராணுவம்
இந்த சம்பவத்தால் வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை. இதற்கிடையில், அப்பகுதிக்கு முழு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தின் போது என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய பஞ்சாப் காவல்துறையுடன் இணைந்து இராணுவம் கூட்டு விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவ தளபதி மனோஜ் பாண்டே இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இது குறித்து விளக்கம் அளிக்க உள்ளார். பதிண்டா இராணுவ நிலையத்திற்குள் இன்று அதிகாலை 4.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தின் போது அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டிருந்ததால், வெளி ஆட்கள் உள்ளே வந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.