ஆயுத பூஜையை முன்னிட்டு எகிறிய பூக்கள் மற்றும் காய்கறி விலை! மதுரை மல்லி கிலோ ரூ.2,000 வரை விற்பனை
செய்தி முன்னோட்டம்
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை ஆயுதப் பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, பூக்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூஜைப் பொருட்களின் விற்பனை வேலூர் மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பண்டிகை காலத் தேவை அதிகரிப்பு மற்றும் பரவலாகப் பெய்து வரும் மழை காரணமாக பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.
வேலூர்
வேலூர் கடைகளில் குவியும் பொதுமக்கள் மற்றும் பொருட்கள் விலை
வேலூர் லாங்கு பஜார் உள்ளிட்ட முக்கிய வணிக பகுதிகளில் ஆயுத பூஜைக்கு தேவையான பொரி, கடலை, பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க காலை முதலே பொதுமக்கள் திரண்டனர்.
பொரி கிலோ ரூ.60 முதல் ரூ.90 வரையிலும், சுண்டல் கடலை கிலோ ரூ.85 முதல் ரூ.140 வரையிலும், நிலக்கடலை ரூ.75-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயம், மாங்காய், டபுள் பீன்ஸ் ஆகியவை கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், பூண்டு அதிகபட்சமாக ரூ.200 முதல் ரூ.240 வரையிலும் விற்பனையாகின்றன.
ஆப்பிள் கிலோ ரூ.220 முதல் ரூ.270 வரையிலும், வாழை பெரிய தார் ஜோடி ரூ.1,200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை உயர்வு
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளது.
வரத்து குறைவு மற்றும் மழை காரணமாக மதுரை மல்லிகைப்பூ கிலோ ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
பிச்சிப் பூ கிலோ ரூ.1,300, முல்லை ரூ.1,200, கனகாம்பரம் ரூ.1,500, சம்பங்கி மற்றும் ரோஜா பூக்கள் கிலோ ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
விலை உயர்வு காணப்பட்டாலும், பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
மழை நீடிக்கும் பட்சத்தில் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.