உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்: ஆடியோ சர்ச்சை பற்றி பேசிய PTR
உதயநிதி, சபரீசன் பற்றி வெளியான சர்ச்சைக்குரிய ஆடியோ தான் பேசியது இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்(PTR) கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்தார்கள் என்று கூறும் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவில் பேசியிருப்பது தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஒரு அறிக்கையையும் ஒரு வீடியோவையும் வெளியிட்டார்.
PTR வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு புதிய திட்டங்களையும், வரலாறு காணாத சாதனைகளையும் மிக முக்கியமான நிதி சீர்திருத்தங்களையும் நாங்கள் செய்துள்ளாம். கடந்த 10 ஆண்டுகளில் செய்யமுடியாத விஷயங்களை நாங்கள் 2 ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளோம். அதனால் தான் இதை திராவிட மாடல் என்று கூறுகிறோம். எங்கள் திராவிட மாடல் ஆட்சியை பொறுக்கமுடியாத சிலர் தான் தங்கள் மலிவான தந்திரங்களை பயன்படுத்தி அந்த ஆடியோவை சித்தரித்துள்ளனர். அடுத்த தலைமுறையின் நம்பிக்கையாக உதயநிதி இருக்கிறார். சபரீசன் எனது நம்பிக்கைகுரிய ஒரு ஆலோசகர் ஆவார். நான் பேசியதாக வெளியான ஆடியோ முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. இது போன்ற ஆடியோ உலகெங்கும் கிடைக்கிறது. பிளாக்மெயில் செய்யும் நோக்கத்தோடு இதை தயாரித்த கும்பலின் நோக்கம் பலிக்காது. என்று கூறியுள்ளார்.