பிரதமர் மோடி பற்றி பேசிய கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ்: காட்டத்தில் பாஜக
இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கௌதம் அதானியின் சமீபத்திய பங்குச் சந்தை பிரச்சனைகள் 'இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை' தூண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி 'கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்' என்றும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் சமீபத்தில் கூறி இருந்தார். அதானி பிரச்சனைகளால் "இந்தியாவின் கூட்டாட்சி அரசாங்கத்தின் மீது மோடி வைத்திருக்கும் பிடி பலவீனப்படுத்தப்படும். இந்தியாவிற்கு தேவையான நிறுவன சீர்திருத்தங்கள் ஏற்படும். இந்தியாவில் ஒரு ஜனநாயக மறுமலர்ச்சியை நான் எதிர்பார்க்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். மேலும், "பங்கு மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜார்ஜ் சோரோஸுக்கு கண்டனம் தெரிவிக்கும் இந்திய கட்சிகள்
இதனையடுத்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி-இரானி, "இந்தியாவின் மீதான தாக்குதல்களை சகித்துக்கொள்ள முடியாதது" என்றும், "இந்தியாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிட முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கு" இந்தியர்கள் ஒற்றுமையாக பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். "பிரதமர்-அதானி ஊழல், இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியைத் தூண்டுமா என்பது முழுக்க முழுக்க காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்தல் செயல்முறையைப் பொறுத்தது. ஜார்ஜ் சோரெஸுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நமது 'நேரு'விய மரபு, சோரெஸ் போன்றவர்களால் நமது தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது." என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம்-ரமேஷ் கூறியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு முதலாளித்துவத்திற்கும் அதானிக்கும் சாதகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது.