
மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டமாக துவங்கிய இந்த கலவரம் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனிடையே குகி பழங்குடியினத்தினை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, கலவரக்காரர்களால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட கொடூரம் அங்கு அரங்கேறியுள்ளது.
இந்த வீடியோ அண்மையில் வெளியான நிலையில், நாடு முழுவதும் இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் தனது கடும் கண்டனத்தினை தெரிவித்துள்ளார்.
கலவரம்
இந்த நிகழ்வு குறித்த விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்ய வலியுறுத்தல்
மேலும் இவ்விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதாவது,"மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்களுக்கு நேர்ந்த நிகழ்வு மிகவும் கொடூரமானது. இச்சம்பவம் பெரும் கவலையில் என்னை ஆழ்த்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.
"தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அம்மாநில அரசு மற்றும் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்".
"அவ்வாறு எடுக்காவிடில் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட நேரிடும்" என்றும் தெரிவித்துள்ளார்.
"இதுப்போன்ற கலவரங்களில் பெண்கள் ஒரு கருவியாக பயன்படுத்துவது என்பது அரசியலமைப்பில் துஷ்பிரயோகத்தின் உச்சமாகும்" என்று கூறிய அவர்,
"ஜனநாயக நாட்டில் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த குற்றத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விரைவில் அதற்கான அறிக்கையினை மணிப்பூர் அரசும், மத்திய அரசும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.