தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பதிலுரை: "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; காவல் துறை தலையீடின்றி செயல்படும்"
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத்தில், காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே உரையாற்றிய அவர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அரசின் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். வெறும் சாலைகளும் தொழிற்சாலைகளும் மட்டுமே ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைத் தீர்மானித்துவிட முடியாது எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால் மட்டுமே புதிய தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் தொழில்கள் முறையாக நடைபெறும் என்றும் சுட்டிக்காட்டினார். சட்டத்தை மதித்து நடக்கும் சாதாரண மக்களுக்கு காவல் துறை உற்ற நண்பனாகவும், குற்றங்களிலும் உரிமை மீறல்களிலும் ஈடுபடுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் திகழ வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
காவல் துறை
"அரசியல் தலையீடற்ற நேர்மையான காவல் துறை"
காவல்துறையின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் முதலமைச்சர், அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் என யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது என்று தாம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளதாக விஜய் தெரிவித்தார்.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தயவுதாட்சணியமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே தவெக அரசின் முதன்மை நிலைப்பாடு என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர்,"அரசை குறைகூறும் நோக்கில் கூறப்பட்ட கருத்தாக இருந்தாலும், மக்களின் பாதுகாப்பு குறித்த அவர்களின் அக்கறையாகவே அதை அரசு பொறுப்புடன் எடுத்துக்கொள்கிறது. உள்நோக்கத்தோடு கூறப்படும் விமர்சனங்களிலும் உண்மை இருக்குமாயின், அதை ஆராய்ந்து ஏற்பதில் எந்தவித பாகுபாடும் காட்ட மாட்டோம்" எனப்பதிலளித்தார்.