'விமான நிலையத்தில் சட்டையை கழற்றச் சொன்னார்கள்': பெண் குற்றசாட்டு!
பெங்களூரு விமான நிலையத்தில் தன்னை வற்புறுத்தி சட்டையை கழற்ற சொன்னதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தும் போது தன்னை வற்புறுத்தி சட்டையை கழற்ற சொல்லி அவமானப்படுத்தியதாக பெண் ஒருவர் தன் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். அகமதாபாத் செல்லும் ஒரு இண்டிகோ விமானத்தில் அந்த பெண் பயணித்திருக்கிறார். இது குறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் 'அவமானமாக' இருக்கிறது என்று பதிவிட்டிருந்த அவர், அந்த ட்விட்டர் பதிவு வைரலானதும் பதிவையும் அவரது ட்விட்டர் கணக்கையும் நீக்கிவிட்டார். இந்த விவகாரம் பாதுகாப்புக் குழுக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தின் பாதுகாப்பை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை(CISF) தான் கையாளுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் பதிவு மற்றும் பெங்களூரு விமான நிலையத்தின் பதில்:
"பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையின்போது என் சட்டையைக் கழற்றச் சொன்னார்கள். பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் வெறும் காமிசோலை(உள்ளாடை) மட்டும் அணிந்து கொண்டு பிறரது கவனத்தை ஈர்ப்பது மிகவும் அவமானகரமானது. @BLRAirport ஒரு பெண்ணின் உடையை அவிழ்க்க சொல்வதற்கு என்ன தேவை இருக்கிறது?" என்று பெங்களூரு விமான நிலையத்தின் ட்விட்டர் கணக்கை 'டேக்' செய்து அந்த பெண் பதிவிட்டிருந்தார். ஆனால், நேற்று(ஜன:4) காலை அந்த பதிவு நீக்கப்பட்டிருந்தது. அவரது ட்விட்டர் கணக்கும் அழிக்கப்பட்டிருந்தது. பெங்களூரு விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, "உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இதை நாங்கள் எங்கள் செயல்பாட்டுக் குழுவிற்கு எடுத்துரைத்துள்ளோம்" என்று அந்த அழிக்கப்பட்ட ட்விட்டர் பதிவில் பதிலளித்திருந்தது.