எத்தியோப்பிய எரிமலை சாம்பல் டெல்லி வரை பரவியது; விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்து DGCA அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை சாம்பல் மேகம் டெல்லியை திங்கள்கிழமை இரவு எட்டியதை தொடர்ந்து, விமான போக்குவரத்துத்துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் உள்ள பல வருடங்களாக செயலற்றிருந்த ஹேலி குப்பி(Hayli Gubbi) எரிமலை, சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்தது. இந்த எரிமலையிலிருந்து வெளியேறிய அடர்த்தியான சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்சைடு மேகம், அரபிக் கடல் வழியாக பயணித்து, முதலில் ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதிக்குள் நுழைந்தது. இந்த சாம்பல் மேகம், திங்கள்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் டெல்லியை அடைந்தது. சாம்பல் மேகம் சுமார் 25,000 முதல் 45,000 அடி உயரத்தில் இருப்பதால், தரையில் வசிப்பவர்களுக்கு உடனடி சுகாதார அபாயம் இல்லை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு எச்சரிக்கை
விமான போக்குவரத்துக்கான பாதுகாப்பு எச்சரிக்கை
எரிமலை சாம்பல் மேகத்தின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அனைத்து இந்திய விமான நிறுவனங்களுக்கும் அவசர ஆலோசனையை வழங்கியுள்ளது. எரிமலை சாம்பல் பாதித்த வான்வெளிகள் மற்றும் விமானப் போக்குவரத்து மட்டங்களில் (Flight Levels) கட்டாயம் பறப்பதை தவிர்க்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு DGCA உத்தரவிட்டுள்ளது. விமானிகள் தங்கள் வழிகள் மற்றும் எரிபொருள் திட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும்; என்ஜினில் ஏதேனும் அசாதாரண நடத்தை அல்லது துர்நாற்றம் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.