டெல்லி சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார். தனது அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்துடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக பணம் கொடுத்து வாங்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. பாஜகவின் அந்த எண்ணம் நிறைவேறாது என்பதை நிரூபிப்பதற்காக ஆம் ஆத்மி இன்று டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த பாஜகவுக்கு தைரியம் உள்ளதா என்று சவால் விட்டுள்ளது. மேலும் சட்டசபையில் பேசிய கெஜ்ரிவால், "இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் 2029 தேர்தலில் பாஜகவிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி நாட்டை விடுவித்துவிடும்" என்றார்.
'பாஜக ஏழைகளின் மருந்துகளை நிறுத்திவிட்டது': ஆம் ஆத்மி
"பாஜகவுக்கு ஆம் ஆத்மி மிகப்பெரிய சவாலாக உள்ளது, அதனால்தான் அது அனைத்து தரப்பிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகிறது," என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். "சபையில் எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்க பாஜக முயற்சிப்பதால் இந்த நம்பிக்கைத் தீர்மானம் தேவைப்பட்டது. பாஜக தங்களை 'ராம பக்தர்' என்று கூறுகிறது. ஆனால் அவர்கள் எங்கள் மருத்துவமனைகளில் ஏழைகளின் மருந்துகளை நிறுத்திவிட்டனர்" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது தொடங்கியுள்ளது. அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசைக் கவிழ்க்க பாஜக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்க முயன்றதாக குற்றம் சாட்டினார்.