இன்று டெல்லியில் பெரும் பேரணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
மதுக்கொள்கை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் பெற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று ஹனுமான் கோயிலுக்குச் சென்று டெல்லியில் இரண்டு மெகா பேரணிகளை நடத்த உள்ளார். டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் மார்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால்(ED) கைது செய்யப்பட்ட நேற்று, கெஜ்ரிவால் திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மக்களவை தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்துள்ளது. இன்று, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் காலை 11 மணிக்கு கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோவிலுக்குச் செல்ல உள்ளார்.
டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுமா?
அதன் பின்னர் மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேச உள்ளார். அதனை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய கெஜ்ரிவால் இரண்டு ரோட்ஷோக்களை நடத்த உள்ளார். அதில் ஒன்று தெற்கு டெல்லியில் மாலை 4 மணிக்கும், மற்றொன்று கிழக்கு டெல்லியில் மாலை 6 மணிக்கும் நடைபெறும். கெஜ்ரிவால் தற்போது ஜாமீனில் வெளி வந்திருப்பதால், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், டெல்லியிலும் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி மற்றும் பஞ்சாபில் மக்களவைத் தேர்தல்கள் முறையே மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.