ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை மாநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் தான் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம். இந்நிறுவனம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து முதலீடு செய்த ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி ரூ.2,438 கோடி பணத்தினை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மோசடி வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இதில் சம்மந்தப்பட்டதாக கூறப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேற்று(டிச.,12) சென்னை அசோக் நகரிலுள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 7 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கிற்கும், எனக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை' என்று தெரிவித்தார்.
இன்று நடக்கும் விசாரணையில் உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தொடர்ந்து, 'மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் வெளிநாட்டில் இருந்தோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்' என்று கூறியிருந்தார். இதனிடையே நேற்றைய விசாரணையில் முன்னதாக இவ்வழக்கில் கைதான ரூசோவிடமிருந்து ஆர்.கே.சுரேஷ் ரூ.15கோடி பணத்தினை பெற்றது தெரியவந்துள்ளது. 'ஒயிட் ரோஸ்' என்னும் படத்திற்காக தயாரிப்பாளர் ரூசோவிடம் இருந்து பணம் பெற்றதாக ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் அந்த பணம் திரைப்பட தயாரிப்பிற்கு மட்டுமின்றி தனது சொந்த செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனால், இதுத்தொடர்பான ஆவணங்களோடு ஆஜராகும்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை உத்தரவிட்டனர். அதன்படி ஆர்.கே.சுரேஷ் இன்றும்(டிச.,13)விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதன் உண்மை இன்று நடக்கும் விசாரணையில் தெரியவரும். ஆர்.கே.சுரேஷிடம் நடத்தப்படும் விசாரணை குறித்த அறிக்கையினை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வரும் 18ம்.,தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.