சென்னை ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தின் அதிநவீன வசதிகள் ஓர் பார்வை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(ஏப்ரல்.,8) மதியம் சென்னை பழைய விமான நிலையத்தில் வந்திறங்கினார். இவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் வரவேற்றனர். இதனையடுத்து ரூ.2,400 கோடி செலவில் கட்டப்பட்டிருந்த புதிய விமான முனையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம். புதிய முனையத்தின் கூரைகள் தமிழ் பாரம்பரியம், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடமானது 1,36,295 சதுர மீட்டர் பரப்பளவில் அதிநவீன டெர்மினல் மற்றும் தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தனித்துவ வடிவமைப்பை கொண்டுள்ளது.
3.5 கோடி பயணிகளை கையாளும் வகையில் நவீன முனையம்
இதனை தொடர்ந்து தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் முதற்கட்ட பணிகள் ரூ.2,467 கோடி மதிப்பில் நடந்து முடிந்துள்ளது. ஒரு ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் வகையில் இந்த முனையத்தில் பயணிகள் வேகமாக செல்லவும், அவர்களது உடமைகளை விரைவாக பரிசோதிக்கவும் பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளது. இந்த புதிய முனைய கட்டடத்தில் 10 பேக்கேஜ் கன்வேயர் பெல்ட், 38 லிப்டுகள், 46 நகரும் படிக்கெட்டுகள், 12 எஸ்கலேட்டர்கள் 100க்கும் மேற்பட்ட செக்-இன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மல்டி லெவல் கார் பார்க்கிங், திரையரங்குகள் என பல வசதிகளை கொண்டுள்ளது.